சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும்,அந்த ஒளி நம்மை வழிநடத்தும்- தவெக தலைவர் விஜய்
சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும்,அந்த ஒளி நம்மை வழிநடத்தும்- தவெக தலைவர் விஜய்
சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் தவெக உறுதியாக இருக்கும். நமது கொள்கைகளுக்கு மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் எனப் பெயர் வைத்ததே இந்த உறுதியினால் தான். கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும். அந்த ஒளி நம்மை வழிநடத்தும் என சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தவெக சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டலில் இன்று காலை (டிசம்பர் 22)சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் விஜய் சிறப்புரையாற்றினார்,
‘அன்பும், கருணையும் தானே எல்லாம். தமிழ்நாட்டு மண், தாயன்பு கொண்ட மண். தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒன்று தான் . அதுபோல பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் என எல்லா பண்டிகைகளையும் பகிர்ந்துகொள்ளக் கூடிய ஊர்தான் நமது ஊர். இங்கு வாழ்க்கை முறையும், வழிபாட்டு முறையும் வேறு வேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதரர்கள் .அரசியலுக்கு வந்ததற்கு பிறகு கடவுள் நம்பிக்கை உண்டு என்று அறிவித்தோம். உண்மையான நம்பிக்கைதான் நல்லிணக்கத்தை விதைக்கும், மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்கச் சொல்லித் தரும். அப்படிப்பட்ட நம்பிக்கை இருந்தாலே போதும், எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் ஜெயிக்க முடியும்.ஒரு இளைஞருக்கு எதிராக உடன் இருந்தவர்களே கிணற்றில் தள்ளிவிட்ட பின்னரும் மீண்டும் வந்து அரசனாகும் கதை பைபிளில் உள்ளது.தன்னை கிணற்றில் தள்ளிவிட்ட உடன் பிறந்த சகோதரர்களை, அந்த நாட்டு மக்களை அரசன் எப்படி காப்பாற்றினான் என படியுங்கள்.எப்படிப்பட்ட எதிரிகளையும் நாம் ஜெயிக்கலாம் என்பதை இதுபோன்ற கதைகள் நமக்கு கற்றுத்தருகிறது.
சமூக, சமய, நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் தவெக 100% உறுதியாக இருக்கும். அதில் எந்தவிதமான சமரசமும் கிடையாது. நமது கொள்கைகளுக்கு மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் எனப் பெயர் வைத்ததே இந்த உறுதியினால் தான். கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும். அந்த ஒளி நம்மை வழிநடத்தும். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். அனைத்துப் புகழும் எல்லாம் வல்ல இறைவனுக்கே நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்’ என்று விஜய் தெரிவித்தார்.


Comments are closed.