தெலுங்கானாவில் டொனால்ட் டிரம்ப் பெயரில் முக்கிய சாலை!
தெலுங்கானாவில் டொனால்ட் டிரம்ப் பெயரில் முக்கிய சாலை!
தெலங்கானாவில் அமெரிக்க தூதரக அலுவலகம் அமைந்துள்ள சாலைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயர் வைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

தெலங்கானாவில் அமெரிக்க துணை தூதரகம் அமைந்துள்ள ஹைதராபாத்தின் மிக முக்கிய சாலைக்கு ‘டொனால்ட் டிரம்ப் அவென்யூ’ என்று பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் அமெரிக்க தூதரகத்திற்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது.உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் மற்றும் புகழ்பெற்ற நபர்களின் பெயர்களை ஹைதராபாத்தில் உள்ள முக்கியச் சாலைகளுக்குச் சூட்டுவதன் மூலம் தெலுங்கானாவை இந்தியாவின் கண்டுபிடிப்புகளின் அடையாளமாக நிலைநிறுத்த திட்டமிட்டு முதல்வர் ரேவந்த் ரெட்டி இந்த முன்முயற்சியை எடுத்துள்ளதாக அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் டெல்லியில் நடந்த இந்தியா-அமெரிக்கா நாடுகளின் மாநாட்டில் பேசிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத்தின் முக்கிய சாலைகளுக்கு முன்னணி உலக நிறுவனங்களின் பெயர்களை சூட்ட இருப்பதாக அறிவித்தார்.அதைத் தொடர்ந்து, முன்னணி நிறுவனங்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டு வருகின்றன. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, வரவிருக்கும் கிரீன்ஃபீல்ட் ரேடியல் சாலைக்கு மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பெயர் சூட்டப்பட உள்ளது.
ராவ்ரியாலாவில் உள்ள இன்டர்சேஞ்சின் பெயர் ஏற்கெனவே ‘டாடா இன்டர்சேஞ்ச்’ என்று மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கூகுள் நிறுவனத்தை கவுரவிக்கும் விதமாக, ஹைதராபாத்தின் முக்கிய சாலைக்கு ‘கூகுள் தெரு’ என்று பெயரிடப்பட இருக்கிறது. அதேபோல, மைக்ரோசாப்ட் மற்றும் விப்ரோ நிறுவனங்களின் பெயர்களையும் சாலைகளுக்கு வைப்பது தொடர்பாக தெலங்கானா அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.


Comments are closed.