பிரமாண்ட செம்மொழி பூங்கா திறந்து வைத்தார்- முதல்வர் ஸ்டாலின்
பிரமாண்ட செம்மொழி பூங்கா திறந்து வைத்தார்- முதல்வர் ஸ்டாலின்
கோவையின் புதிய அடையாளமாக, ரூ.208.50 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை இன்று (நவம்பர் 25) தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கோவையில் 45 ஏக்கரில் ரூ.208.50 கோடி ரூபாயில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த செம்மொழி பூங்கா, தமிழகத்திலேயே வேறெங்கும் இல்லாத வகையில், அரிய வகை தாவரங்கள்,செடி,கொடிகள், மர வகைகளுடன் உருவாகியிருக்கிறது. பூங்காவை சுற்றிலும் 2.2 கி.மீ. துாரத்துக்கு நடைபயிற்சி செல்லும் வகையில், சுற்றுப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது. இயற்கை பசுமை சுற்றுலா தலமாக உருவாக்கப்பட்டுள்ள பூங்காவை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அவர், கல்வெட்டு மற்றும் செயற்கை மலைக்குன்றை திறந்து வைத்து, கடையேழு வள்ளல்களின் சிலைகளை பார்வையிட்டார். பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வசதிகளை முதல்வர் ஸ்டாலின் சுற்றிப்பார்த்தார். திறந்தவெளி அரங்கத்தில் கலைநிகழ்ச்சி நடந்தது. பள்ளி குழந்தைகள் மற்றும் வி.ஐ.பி.களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.
2021, நவம்பர் 22ல் கோவை வ.உ.சி.மைதானத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர், இரண்டு கட்டமாக செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார். மொத்தமுள்ள 165 ஏக்கர் பரப்பளவில் முதல்கட்டமாக 45 ஏக்கரில் பூங்கா உருவாக்க முடிவெடுக்கப்பட்டது. 2023 டிசம்பர் 18ல், முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நட்டு துவக்கி வைத்தார். 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று திறந்து வைத்தார். 208.50 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
செம்மொழி வனம், மூலிகை வனம், மகரந்த தோட்டம், பாலைவனத்தோட்டம், மூங்கில் தோட்டம், ரோஜா தோட்டம் என, 23 விதமான தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழை நீர் வடிகால் அமைப்பு 2 கி.மீ. நீளத்துக்கு அமைக்கப்பட்டிருக்கிறது.
சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை,திருவோட்டு மரம், கலிபுடா, வரிகமுகு, மலைபூவரசு எலிச்சுழி, குங்குமம் மரம் ஆகியவை உள்ளன.மரங்கள் மற்றும் செடிகளுடன், 2000-க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் ரோஜா தோட்டத்தில் நடப்பட்டுள்ளன. கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. மரங்கள் மற்றும் தாவரங்களை பற்றி அறியும் வகையில், ‘க்யூஆர்’ கோடு மற்றும் ‘பார்’ கோடு வசதியுடன் கூடிய பெயர் பலகை வைக்கப்படும். ‘க்யூஆர்’ கோடு ஸ்கேன் செய்தால், அதன் சிறப்பை ஒலி வடிவில் கேட்கலாம். நுழைவுச்சீட்டு வழங்குமிடம் மற்றும் அனுபவ மைய கட்டடம். 500 பேர் அமரக்கூடிய திறந்தவெளி அரங்கம், பணியாளர் அறை. உணவகம். ஒப்பனை அறை. சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீர்வீழ்ச்சி ஆகியவையும் அமைந்துள்ளன. பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய பொருள்களுடன் கூடிய அருங்காட்சியகம் மற்றும் தாவரவியல் அருங்காட்சியகம், படிப்பகம், சக்கர நாற்காலிகள், பேட்டரி வாகனங்கள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
உலகத் தர உடற்பயிற்சி கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம். 4,000 சதுர அடி பரப்பளவில் டெராரியம் என்ற உள்வன மாதிரி காட்சியமைப்பு , குழந்தைகளுக்கு 14,000 சதுர அடி விளையாட்டு திடல். உள்விளையாட்டு அறை. மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு திடல் போன்ற பொழுதுபோக்கு வசதிகளும் உண்டு.


Comments are closed.