அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வுக் குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் ரத்தினவேல், அவைத்தலைவர் ஐயப்பன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் ஜோதிவாணன், கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன், மாவட்ட துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், மாவட்ட ஜெ.பேரவை இணைச் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் இன்ஜினியர் இப்ராம்ஷா மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கழகப் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் தங்கமணி, கோகுல இந்திரா ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினர்.
முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசுகையில்….
எடப்பாடியார் ஆணைக்கு இணங்க, கழகத்திற்கான உறுப்பினர் சேர்ப்பு பணி என்பது, ஒரு திண்ணை பிரச்சாரமாக நடத்தப்பட்டது. வசதி படைத்த ஒரு அமைச்சர் திருச்சியில் இருந்து வருகிறார். அவரை தேர்தலில் வீழ்த்துவதற்கு பூத் வாரியாக பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடி கூட்டம் என்றால் ஒவ்வொரு பூத் யில் இருந்தும் குறைந்தபட்சம் 10நபர்களை அழைத்து வந்து பங்கேற்கச் செய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் கருத்துவேறுபாடு இல்லாமல் பெண்களை பங்கெடுக்கச்செய்ய வேண்டும். வெற்றி பாதையில் கடினமாக உழைக்க வேண்டும் என்றார்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில்,…
அடிமட்ட உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய எடப்பாடியார், தனது உழைப்பாலும், விசுவாசத்தாலும் இன்று அதிமுக பொதுச்செயலாளராக இருக்கிறார். இவர் தமிழகத்தில் 4 ஆண்டுகாலம் முதல்வராக சிறப்பான ஆட்சியை தந்தார். 2 தொகுதிகளை கொண்டது திருச்சி மாநகர் மாவட்டம். இந்த தொகுதிகளை வெற்றி பெறச் செய்து, அம்மாவின் கோட்டையாக இருந்தது திருச்சி. இதனை மீண்டும் அதிமுகவின் கோட்டையாக மாற்ற கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். தியாகத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த புரட்சி தலைவருக்கும், தலைவிக்கும் நன்றிக்கடனாக, வரும் 2026 தேர்தலில் அதிமுக வை வெற்றி பெறச்செய்யுங்கள். வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்களின் பெயர்களை பயன்படுத்தி எதிரணியினர் கள்ள ஓட்டு போட வாய்ப்புள்ளது. இதனை தடுக்கும் வகையில் இறந்தவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் கோவை, சிவகாசி ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்த நிலையில் புரட்சி தலைவர் தனது கடின உழைப்பால் அதிமுகவை ஆட்சி கட்டிலுக்கு கொண்டு வந்தார். சட்டமன்ற தேர்தல் வேறு, நாடாளுமன்ற தேர்தல் வேறு. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு வாக்கு விகிதம் உயர்ந்துள்ளது. அதே தேர்தலில் திமுகவின் வாக்கு விகிதம் குறைந்து விட்டது. இதனை மனதில் கொண்டு சட்டமன்ற தேர்தலில் உழைத்து அதிமுகவை வெற்றிபெறச்செய்ய வேண்டும் என்றார்.
அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்,…
ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஊடகங்களை திமுக தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு அதிமுக செய்திகளை வெளிவராமல் தடுத்து வருகிறது. அப்பா முதல்வர், மகன் துணை முதல்வர். அடித்து நொறுக்கி பணத்தை அள்ளிக் கொண்டு இருக்கிறார்கள். இப்போது கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டங்கள் நடத்துவதை காணமுடிவதில்லை. ஒரு முதல்வர் பேசக்கூடாத வார்த்தைகளை பேசி வருகிறார். அரசியல் ஆண்மை இருந்தால் திமுக அரசின் சாதனைகளை பட்டியலிடட்டும் என்னுடன் விவாதிக்க தயாரா? என எடப்பாடியார் கேட்டதற்கு இதுவரை ஸ்டாலின் பதில் சொல்ல வில்லை. திமுகவை அப்பாவும் மகனும் கண்டு பிடிச்ச மாதிரி நடந்து கொள்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியை தமிழ்நாட்டில் முடிவுக்கு கொண்டு வந்தவர் அண்ணா. கட்சிக்கு இடையில் வந்தவர் கலைஞர். எடப்பாடியாருக்கு தெய்வத்தின் அருள் இருக்கிறது. 2 நாளில் சசிகலா முதல்வராக பதவியேற்பதற்கான பணிகள் நடந்த வேலையில், நீதிமன்ற தீர்ப்பால் அவர் 4 ஆண்டு சிறைக்கு சென்று விட்டார். அவரை முதல்வராகவிடாமல் இறைவன் தடுத்து விட்டார். இறைவன் வாய்ப்புக் கொடுத்த எடப்பாடியாரை நாங்கள் ஆதரித்து வருகிறோம். தேனியில் தோல்வியுற்றவர் டி.டி.வி. இவரிடம் மைக்கை நீட்டினால் 2026 எடப்பாடி கட்சியை ஒழித்து விடுவார் என்கிறார். டி.டி.வி என்ன ஜோதிடரா? நிறைய கொள்ளையடித்து அறக்கட்டளை பேரில் பணம் வைத்திருக்கிறார்கள். அந்த பணத்தில் எழுதாத பேனாவை வைத்துக் கொள்ளட்டும். அரசு பணத்தில் எழுதாத பேனா எதற்கு? கஞ்சா விற்பது திமுக காரர்கள். லஞ்சம் வாங்கி சிறைக்கு சென்ற செந்தில் பாலாஜிக்கு வெட்கம் இல்லாமல் முதல்வர் வரவேற்பு கொடுக்கிறார். அவருக்கு மீண்டும் மந்திரி பதவி. இதை கேட்க நாதி இல்லாமல் போனது. ஆட்சியில் இருப்பதால் சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறார். தமிழ்நாட்டில் பெண் பிள்ளைகளை நம்பி எங்கும் அனுப்ப முடியவில்லை. பாதுகாப்பற்ற நிலை இருக்கிறது. எனவே 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை அகற்றி அதிமுக ஆட்சி அமைய அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும். 2026 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வருவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. திருச்சியில் டிடிவி சற்று குழைத்து வைத்திருப்பதாக கேள்விப்பட்டேன். அதையெல்லாம் தூக்கி எறிந்து விடுங்கள். சசிகலா, டி.டி.வி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் அனைவரும் செல்லாக் காசுகள். இவர்களை அதிமுகவினர் அனைவரும் புறந்தள்ளுங்கள். எடப்பாடி பழனிச்சாமி மாபெரும் சக்தியாக உருவெடுத்துவிட்டார். இனி யாராலும் தடுக்க முடியாது என்றார்.
Comments are closed.