ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வருகிற 26 ஆம் தேதி ரஷியாவிற்கு செல்லவிருக்கிறார். உக்ரைன் மீதான ரஷியாவின் போர் இரண்டு மாதங்களை எட்டியுள்ளது. உக்ரைனின் தலைநகர் கீவ், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷியா தாக்கி அழித்துள்ளது. மரியுபோலில் எஃகு ஆலையைத் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளையும் ரஷியப்படை கைப்பற்றியுள்ளது. உக்ரைன் மீதான போரை நிறுத்த வேண்டும் என ஐ.நா. மற்றும் உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வருகிற 26 ஆம் தேதி ரஷியாவிற்கு செல்லவிருக்கிறார். ரஷியத் தலைநகர் மாஸ்கோவிற்குச் செல்லும் அவர் அதிபர் புதினை சந்தித்துப் பேசவுள்ளார். மேலும் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் சந்திப்பு மேற்கொள்கிறார். குட்டரெஸின் இணை செய்தித் தொடர்பாளர் எரி கனெகோ வெள்ளிக்கிழமை நியூயார்க்கில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பில் உக்ரைன் போர் குறித்து பேசக்கூடும் என்று தெரிகிறது.
ரஷியாவைத் தொடர்ந்து அன்டோனியோ குட்டரெஸ், உக்ரைனுக்குச் சென்று அதிபர் ஸெலென்ஸ்கியை சந்திப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.