நவபாஷாண நாயகன், மாயன் இனத்தின் குலகுரு மகா சித்தர் அருள்மிகு போகர்
தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி வட்டத்தில் அமைந்ததுள்ள அருள்மிகு மகா சித்தர் போகர் அவர்களின் ஆலயத்தை பற்றிய சிறப்பு வாய்ந்த தொகுப்பு.
மாதா பிதா குரு தெய்வம் என்னும் வார்த்தைகளுக்கு இணங்க ஒரு மனிதன் பிறந்து இறந்து மீண்டும் பிறந்து இறக்கும் இந்த சம்சார பந்தத்தில் இருந்து மனிதனை நல்வழிப்படுத்தி அவர்களை பக்தி, தொண்டு, யோகம், ஞானம் என்னும் நான்கு சைவ நெறிமுறைகளின் வழியில் வழிநடத்தி “வீடுப்பேற்றை” அடையச்செய்யக்கூடிய முழு தகுதிபெற்றவரை நாம் குருவாக ” பெற்று ” குரு சொல்கேட்டு குரு வழி நடந்து செல்லுதல் என்பது மனித வாழ்வின் மிக பெரிய மற்றும் நிரந்தரமான பேரின்பம் அதுவே அல்லாமல் வேறொன்றுமில்லை.
அப்படி குருவை அடைந்தவர்களும் அடைய போகிறவர்களும் நமது இறைவனானவனை கண்ட பதினெண் சித்தர்களை – குருமார்களை சரணடைந்து பயணிக்கும் இந்த நாட்களில் அவர்கள் மக்களுக்காக எவ்வளவு பெரிய தொண்டுகளை செய்துள்ளார்கள் என்பது நமக்கு தெரிந்த மிக சிறிய அளவே அதையும் கடந்து பல விஷயங்களை காலமும் விதியும் நம்மை அவர்களின் தொண்டைப்பற்றி அறிய முடியாது வைத்து இருக்கும் இக்காலகட்டத்தில் மகா சித்தர் போகர் ஐயா அவர்களின் திருக்கோவிலை பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் இங்கு…
சித்தர் என்றால் போகர் – போகர் என்றால் நவபாஷாணம் – நவபாஷாணம் என்றால் பழனி – பழனி என்றால் நவபாஷாண முருகன். ஞானக் கடவுளான முருகனை தமிழ் கடவுளான சண்முகனை நவபாஷாணத்தால் சிலையாக வடிவமைத்து பழனியில் பிரதிஷ்ட்டை செய்து மக்களின் பல நோய்களுக்கு ஒரே மருந்தாக வடிவமைத்த பாலதண்டாயுதபாணி சிலைக்கு இறுதிவடிவம் கொடுத்த மலையே “திருஈங்கோய்மலை”.
9 வகையான பாஷாணங்கள், 9 வகையான விறகுகள், 9 வகையான வடிகட்டிகள், 1000 க்கும் மேலான அற்புத மூலிகைகள், பலவகையான ரசவகைகள், திரவவகைகள் கலந்து காய்ச்சி வடிகட்டி புடமிட்டு செய்யப்பட்டது நவபாஷாண சிலைகள்.
இதற்க்கான பலவேலைகளை பலமலைகளில் பல சித்தர்களின் துணைக்கொண்டு வெள்ளியங்கிரி, சதுரகிரி, கன்னிவாடி, மேற்கு மலை, கஞ்சமலை, உளவாயன் மலை, பர்வதகிரி, இரத்தினகிரி, திருஈங்கோய்மலை என்று பலமலைகளில் ஒவ்வொரு பாசனத்தின் தன்மைக்கு ஏற்ப தேர்ந்து எடுத்து செய்யப்பட்டது இதற்க்கு அவருடன் 81 சித்தர்களும் ஆஸ்தான சீடர்களான புலிப்பாணி மற்றும் கோரக்கர் பெரிதும் உதவினர். சித்தர்கள் இதை செய்ய சுமார் 100 ஆண்டுகள் எடுத்துக்கொண்டனர் என்பதை ஆராய்ந்து அறியும் போது பெரும் வியப்பை அளிக்கிறது..
குளிர்ந்த காற்று, நீரோடைகள், அருகிலே காவேரி ஆறு ஓடுவதாலும் மேலும் பலமலைகளை காட்டிலும் திருஈங்கோய்மலையில் நேர்மறை சக்திகள் அதிகம் இருப்பதாலும் நவபாஷாண சிலைகளுக்கு இறுதிவடிவம் இம்மலையில் வைத்து கொடுக்கப்பட்டு பழனிக்கு எடுத்து செல்லப்பட்டதாக தகவல்கள் அறியப்படுகின்றன.
மகா சித்தர் போகர் அவர்கள் நவபாஷாண சிலைகள் ஒன்றோ இரண்டோ செய்யவில்லை அவர் 6 நவபாஷாண சிலைகளை செய்தார். அதில் ஒன்றை சித்தர்கள் வழிபட கைலாயத்திலும், பழனியில் ஒன்றும், பூம்பாறையில் ஒன்றும், சீன தேசத்தில் ஒன்றையும், கலியுகத்தில் பழனி சிலை சேதம் அடைந்து போகும் போது மீண்டும் கலியுகத்தில் கொடிய நோய்களின் தாக்கத்தை சரிசெய்யவும் ஒன்றை எங்கோ மறைத்து வைத்துள்ளார் என்றும் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன..
6 வது சிலையாக காலபைரவர் சிலையையும் செய்து அதையும் பயன்பாட்டில் இல்லாதும் வைத்துள்ளார். நவபாஷாணத்தோடு உலகில் இல்லாத ஒரு சூட்சும பாசானத்தை உருவாக்கி அதையும் சேர்த்து தசபாசானமாக நவபாஷாணத்தை புடமிட்டு ஒரு தசாபாசன சிலையை செய்து கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவிலிலும் பிரதிஷ்டை செய்துள்ளார். மேலும் இவை அனைத்தும் கலியுகம் முடியும் வரை அதன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தும் என்பதை அவர் நூல்களில் எழுதிவைத்துள்ளார் என்றும் தகவல்கள் அறியப்படுகின்றன.
முக்கண் முதல்வனால் உருவாக்கப்பட்டு, தமிழ் கடவுளாம் முருகனால் உபதேசிக்கப்பட்டு, கும்பமுனி அகத்தியரால் செந்தமிழாக வளர்க்கப்பட்ட தமிழ் மொழியின் வலிமையையும் இலக்கண நடையையும் உலகளவில் செம்மொழியாக்கிய மகா குருநாதர் போகர் மாயன் என்னும் இனத்திற்கு குலகுருவாக இருந்து மாயன் என்னும் எதிர்காலத்தை குறிக்கும் நாட்காட்டியை வேதியியல் மற்றும் ஞானத்தின் சூட்சுமமாய் உருவாக்கினார். அது முடிந்து விட்டதாக பலரும் கருதினாலும் அது கலியுகத்தின் கடைசிவரை இயங்கும் என்றும் குறிப்பிடப்படுகிறது. மாயன் இனம் தமிழினம் அதிலும் சோழர் இனம் என்றும் இதற்கு அவர்களின் மொழியின் மூலத்தை ஆய்ந்து பார்க்கும் பல ஆராய்ச்சிகளும் நடந்துவருவது உலகம் அறிந்த ஒன்றே.
அவருக்கென்று தனி ஆலயம் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னாள் திருதிருஈங்கோய்மலையில் முசுகுந்த சக்கரவர்தியால் கட்டப்பட்டுள்ளது. இதன் காலவரம்பை தொல்லியல் துறையாலும் அறியமுடியவில்லை ஆனால் அவர் பழனி முருகன் நவபாஷாண சிலைக்கு இங்கே இறுதிவடிவம் கொடுத்துள்ளார். பழனி முருகன் சிலை துவாபர யூகத்தின் இறுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பதால் இது மிகவும் பழமை வாய்ந்தது என்பது மட்டும் நிசப்தமான உண்மை.
மகா குரு போகர் இம்மலையில் இருந்து மக்களுக்கு மருத்துவத் தொண்டு செய்துக்கொண்டு இருந்தபோது அங்கு நாடி வந்த சக்கரவர்த்திக்கு குரு கொடுத்த காட்சியை சக்கரவர்த்தி சிலையாக வடித்துள்ளார். மூலபந்த சூட்சமாசனத்தில் போகர் அமர்ந்து ஓலையை படிப்பதாக இருக்கும் சிலையை வேறு எங்கும் காண இயலாது. அதை அவர் கோரக்கரின் சொல் கேட்டு இத்திருக்கோவிலில் சிலையாக வடிவமைத்துள்ளார் என்றும் பேச்சுவழக்கில் குறிப்பிடப்படுகிறது.
திரேதாயுகம் வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் தோன்றி மூன்று அட்டோத்திர 324 ஆண்டுகள் மட்டும் இப்பூவுலகில் ஸ்தூல உடம்பில் சீவித்து மக்களுக்காக மிகப்பெரும் தொண்டுகளை செய்த மகா குருவாம் அருள்மிகு போகர் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் பரணி நட்சத்திரத்தில் இவ்வாலயத்தில் குரு பூஜையும், வைகாசி மாதம் வரும் ஜென்ம நட்சத்திரத்தில் மகா குரு பூஜையும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் அன்று அன்னதானமும் வழங்கப்படுகிறது.
இத்தலத்தைப் பற்றி மிகவும் குறிப்பிட்டு சொல்லப்படுவது என்னவென்றால் பரணி நட்சத்திரத்தன்று உச்சிகால நேரத்தில் அவர் அங்கு அருவுருவமாய் வருகின்றார் என்று பக்தர்கள் சொல்ல கேட்பதுதான் இத்தலத்தின் மிகப்பெரிய சூட்சமம். இப்படி மகா குருவாம் போகருக்கென்று தனியாக உள்ள ஆலயத்தில் சென்று அவரை வணங்குவதால் உண்டாகும் பலன் மிக பெரியது. சித்தன் வாக்கு சிவன் வாக்கு என்னும் பொன்மொழிக்கு ஏற்ப சித்தர்களின் சீவசமாதியிலும் அவர்கள் தவம் செய்த இடங்களுக்கும் நாம் சென்று வணங்கும் போது நம் கர்மாவை அழித்து நர்கதி அளிப்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஆலயத்தை நாமும் அடைந்து மகா குருவின் அருளும் ஆசியும் பெற்று வரும் நாட்களில் அவரது காட்சியும் பெறுவோமாக.
இப்படி குருவை பற்றி பேச ஆயிரம் ஆயிரம் சிறப்புகள் அவரது படைப்புகள் இருக்கிறது தகவலின் நீளம் அதிகரிப்பதால் அதை வரும் நாட்களில் மேலும் தெரிந்து கொள்வோம்.
ஓம் போக தேவாய நம , குருவே சரணம்! திருவடி சரணம்!