சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதைப் பொருள் விற்பனையை அடியோடு நிறுத்த தேவையான கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சுதந்திரம் வழங்க திமுக அரசை வலியுறுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது….
இதுவரை கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் வியாபாரம் தமிழகத்தில் நடைபெற்று வந்த நிலையில், தங்கள் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் யார் தாதா? என்று போட்டி சண்டை இதுவரை ஏற்பட்டதில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேற்று 2.7.2024 அன்று அதிகாலை, தனியார் கல்லூரிகள் அதிகமுள்ள சென்னை புறநகர் பகுதியான பெருங்களத்தூரில், கஞ்சா போன்ற போதைப் பொருள் விற்கும் ஒரு பகுதிக்கு யார் தாதா என்ற கோஷ்டி சண்டை (Gang War) ஏற்பட்டு, முடிவில் இச்சண்டை இரண்டு இளைஞர்கள் படுகொலையாக மாறியிருப்பது தமிழகத்திற்கே புதிது என்று இன்றைய நாளிதழ்களில் வந்த செய்திகள் தெரிவிக்கின்றன. விடியா திமுக திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு காவல்துறையின் தோல்விகளில் இதுவும் ஒன்று என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். இனியாவது அரசியல் குறுக்கீடின்றி தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதைப் பொருள் விற்பனையை அடியோடு நிறுத்த தேவையான கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சுதந்திரம் வழங்க விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.