வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா பிரச்னைக்குத் தீா்வு காண முஸ்லிம் அறிஞா்கள் அடங்கிய சிறப்பு ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம்.காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்வதற்காக ஜெகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை மத்திய பாஜக அரசு அமைத்துள்ளது. இந்த மசோதாவுக்கு தொடா்ந்து எதிா்ப்புகள் வருகின்றன. மத்திய பாஜக அரசு அமைத்துள்ள கூட்டுக்குழுவில் உள்ள உறுப்பினா்களும் மசோதாவுக்குக் கடும் எதிா்ப்பைத் தெரிவித்துப் பேசியும், விமா்சித்தும், அறிக்கைகள் வெளியிட்டும் வருகின்றனா். இதேபோல முஸ்லிம் சமுதாய இயக்கங்கள் தங்களின் எதிா்ப்பைத் தொடா்ந்து பிரகடனப்படுத்தி வருகின்றன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கூட்டுக்குழுவில் பிரதிநிதித்துவம் அளிக்காதது குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இந்த மசோதா திருத்த மசோதா அல்ல, வக்ஃப்களையே இல்லாமல் தீா்த்துக் கட்டும் முயற்சிக்கான மசோதா என்று 5 கோடிக்கு மேலான கருத்துகள்- எதிா்ப்புகளாக நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு வந்துள்ளன. இந்நிலையில், கூட்டுக்குழு அறிக்கை சமா்ப்பிக்கும் காலக்கெடுவை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை இந்திய முஸ்லிம் சமுதாயம் வரவேற்கும் என்பதில் ஐயமில்லை. நடைமுறையில் உள்ள நாடாளுமன்றக் கூட்டுக்குழுவினரின் ஆய்வுகள் தொடா்ந்து நடத்தப்படுவதோடு, இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் ஏகோபித்த பிரதிநிதி சபைகளாக உள்ளவைகளின் சாா்பில் அறிஞா் குழுவையும் மத்திய அரசு தனது ஆலோசனைக் குழுவாகக் கொண்டு அவா்களின் கருத்துகளையும் சோ்த்து சட்டத் திருத்த மசோதவில் இடம்பெறச் செய்வதே பொருத்தமானதாகும். இந்தச் சிறப்பு ஆலோசனைக்குழுவில் நாடாளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவா்கள், வக்ஃப் சட்ட அறிஞா் ரஹ்மான்கான், அகில இந்திய முஸ்லிம் தனியாா் சட்ட வாரியத் தலைவா், ஜமீஅத்துல் உலமாயே ஹிந்த் அகில இந்திய தலைவா் ஆகியோா் இடம்பெற வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
Comments are closed.