திருச்சி உலக நாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் 70 -ஆம் ஆண்டு தேர் திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் 4-ந் தேதி தொடங்கியது. முன்னதாக முத்துமாரியம்மன் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்டு வீதி உலா வந்து பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று (6ந் தேதி) இரவு 8.30 மணிக்கு தேர்த்திருவிழா நடைபெற்றது. கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து உற்சவ அம்மன் புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கல்லுக்குழி, என்.எம். கே காலனி வழியாக வீதி உலா வந்து உலக நாதபுரம் அம்மன் கோவிலை வந்தடைந்தது.தேர் சென்ற வீதிகளில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு காவிரியாறு அய்யாளம்மன் படித்துறையில் இருந்து பால் காவடி, அக்னிச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தது.தொடர்ந்து காலை 11 மணிக்கு அன்னதானம் நடைபெறும். மதியம்12 மணிக்கு அம்மனுக்கு கஞ்சி வார்க்கும் நிகழ்ச்சி,மாலை 4 மணிக்கு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 7 மணிக்கு செல்வ விநாயகர் கோவிலில் இருந்து அம்மனுக்கு முளைப்பாரி ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.
நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சங்கிலி ஆண்டவர் கோவிலில் சுத்த பூஜை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 3 மணிக்கு மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.
9 -ந் தேதி காலையில் சங்கிலி ஆண்டவர் கோவிலில் பூஜை செய்து மதியம் உணவு திருவிழா நடைபெறும். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து உள்ளனர்.