திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 50 வது ஆண்டு பொன்விழா – தி.க. தலைவர் வீரமணி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு!
திருச்சி பெரியாா் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 50 ஆவது ஆண்டு பொன்விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. பெரியார் மணியம்மை கல்வி நிறுவனங்களின் தலைவரும், திராவிடர் கழகத்தின் தலைவருமான கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழக நகா்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவியா், ஆசிரியா்கள், பள்ளி அலுவலக பணியாளா்கள், முன்னாள் தலைமை ஆசிரியா்கள், விடுதிக்காப்பாளா் உள்ளிட்ட பலருக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினா். முன்னதாக இந்த ஆண்டு விழாவில் பெரியார் குறித்த நாடகங்கள் மற்றும் பள்ளி வரலாறு குறித்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அமைச்சா் கே.என்.நேரு பேசுகையில்…
தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் எத்தனையோ அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இருந்தாலும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என கல்விச்சேவை ஆற்றி வருவது தி. க. மட்டும்தான். சாமானிய குடும்பத்தைச் சேர்ந்த பின்தங்கிய மாணவ, மாணவியரும் இணையான கல்வி பெறும் வகையில் பெரியாா் கல்லூரியை தொடங்கினாா். பின்னா் அவரது வழி வந்த ஆசிரியா் கி. வீரமணி தலைமையிலான இக்கல்விக்குழுமம், கல்லூரி மட்டுமின்றி பள்ளிகள் முதல் கல்லூரி, பல்கலைக்கழகங்களையும் ஏற்படுத்தி கல்விச்சேவை ஆற்றி வருகிறது. இந்த கல்வி நிறுவனம் நூற்றாண்டு விழாவும் காணும் வகையில் வளர வாழ்த்துகள் என்றாா் என்றார்.
அமைச்சா் அன்பில் மகேஸ் பேசுகையில்…
பெரியாரின் கொள்கையின்படி பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இக்கல்வி நிறுவனம் ஏராளமான பெண்களின் கல்விக்கு அடித்தளமிட்டுள்ளது. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பெண்கள் கல்விக்காக புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா், இத்திட்டத்துக்கு வித்திட்டவா் பெரியாா். மாணவியா் இப் பருவத்தில் கல்வி மட்டுமே பிரதானமாக கொள்ள வேண்டும். அதே நேரம் உலக அறிவும் அவசியம் என்றாா்.
தி க தலைவா் கி. வீரமணி பேசுகையில்…
பெரியாா் கூறியதுபோல அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்கிணங்க, சாமானியா்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற வகையில் இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. திராவிட கட்சி நிா்வாகத்துக்கு உள்பட்ட கல்வி நிறுவனம் என்பதால் பாகுபாடு நிலவுகிறதா என பலரும் சந்தேகத்துடன் இருந்த காலமும் உண்டு. ஆனால் அவற்றை பொய்யாக்கி இங்கு அனைவருக்கும் தரமான கல்வி போதிக்கப்படுகிறது.
எனவேதான் இங்கே பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியா்கள் முதல் இந்நாள் ஆசிரியா்கள், அலுவலக பணியாளா்கள், சிறந்த மாணவியா் என அனவரும் பாராட்டப்பெற்றுள்ளனா். நமது கல்வி அமைச்சா் இப்பள்ளிக்கு கூடுதல் கட்டட வசதி அமைத்து தரவேண்டும் என்றாா்.
நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயா் அன்பழகன், மண்டலத்தலைவா் மதிவாணன், பள்ளி செயலாளா் அன்புராஜ், தலைமை ஆசிரியா் பாக்கியலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.