அருள்மிகு ஆனந்தவள்ளி தாயார் உடனுறை அருள்மிகு போஜீஸ்வரர் ஆலயம் தல வரலாறு மற்றும் சிறப்பம்சங்கள்
சோழ வள நாட்டில் காவிரி நதியின் வடபால் திருச்சி மாநகரிலிருந்து பெரம்பலுர் செல்லும் சாலையில், சுமார் 20 கீ.மி தொலைவில் சமயபுரத்திற்கு வெகு அருகில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் கன்னட மன்னன் வீரசோமேஸ்வரனால் 13ம் நூற்றாண்டில் கருங்கற்களால் கட்டப்பட்ட சுமார் 800 ஆண்டு கால பழமையான எழில் மிகு ஆலயம் ஆகும். மைசூரைச் சேர்ந்த துவார சமுத்திரத்தை தலைநகரமாகக் கொண்டு, ஆட்சி புரிந்த ஹொய்சால மன்னர்களில் இரண்டாம் நரசிம்மன் 13ம் நூற்றாண்டில் சோழ மன்னனுக்கு போரில் உதவி புரிந்து பகைவர்களை முறியடித்து சோழன் அரியணை ஏற உதவி புரிந்தான். இவருடைய புதல்வன் வீரசோமேஸ்வரன் தமது இராஜ்ஜியத்தைத் தமிழகத்தில் விரிவுப்படுத்த எண்ணி கண்ணனூரைத் தலைநகரமாகக் கொண்டு விக்கிரமபுரம் என்ற பெயரில் ஆட்சி புரிந்தான். ஹொய்சால மன்னர்களில் இவன் தலைச்சிறந்தவனாகக் கருதப்படுகிறான். வீரசோமேஸ்வரன் கண்ணனூரில் (தற்போது சமயபுரம்) உலகெல்லாம் தனது கருணை மழையால் குளிர்விக்கும் சிவனுக்கு ஆலயம் நிர்மானித்து, அதில் மற்ற தெய்வங்களையும் அழகுற நிர்மானித்தான். இவரைப் பற்றிய கல்வெட்டுகள் திருவரங்கம் கோவிலிலும், திருவானைக்கோவில் கல்வெட்டுகளிலும் காணலாம். இவர் கட்டிய கோவில் போஜராஜன்(போஜுஸ்வரர்) கோவில் என வழங்கப்படுகிறது. இக்கோவிலுக்கு அருகில் வண்ணமிகு மாளிகைகளும், எழில்மிகு கோட்டைகளும் இருந்து, பின்னர் பகைவர்களின் படையெடுப்பால் அழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இவருடைய பெயரில் திருவரங்கத்திற்கு அருகில் வீரசோமேஸ்வரமும் (தற்போது வீரேஸ்வரம்), வயலூர்க்கு அருகில் சோமேஸ்வரன் பேட்டை (தற்போது சோமரசம்பேட்டை) என்ற கிராமங்களும் இருக்கின்றது.
கர்நாடகத்தைச் சேர்ந்த ஹொய்சால வம்சத்தில் தலைச்சிறந்த வீரசோமேஸ்வரன்;; சடையவர்மன் சுந்தர பாண்டியனால் போரில் கொல்லப்பட்டார். ஹொய்சால அரசு சரிந்த போதும், வீரசோமேஸ்வரனால் கட்டப்பட்ட போஜுஸ்வரர் ஆலயம் அமைதியாய் அவர்களின் ஆட்சி, கட்டிடக்கலை, கலைநயம் இவற்றுக்கு சான்றாக நிமிர்ந்து நின்று அவர்கள்; புகழை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
இக்கோவில் திருவரங்கத்தின் அருகில் வீரசோமேஸ்வரனால் எழுப்பப்பட்ட காட்டழகிய சிங்கர் கோவில் போலவே கருங்கற்களால் கட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவில் முழுவதும் கருங்கற்கலாலேயே கட்டப்பட்டு, பெரிய சுற்றுச் சுவருடன் அமைந்துள்ளது. சுவர்களில்; அழகிய வேலைப்பாடமைந்த சிற்பங்களைக் காணும் போது நமக்கு மெய்சிலிர்த்து, அவர்களின் கலைதாகத்தினை வெளிப்படுத்துவது பிரம்மிப்பூட்டுவதாக அமைகின்றது. கோவிலின் எதிரிலேயே பெரிய கிணறு அமைக்கப்பட்டு, நீர் அதிலிருந்து கோவிலின் பூஜைக்கு பயன்படுத்தப்பட்டது.
கோயிலின் சிறப்பம்சங்கள்
அமிர்தமிருத்ஞ்சயர்:
போஜீஸ்வரர் கோவில் நுழைவாயில் கிழக்கு திசையில் உள்ளது. அதன் இருபுற சுவர்களில், சித்திர வேலைப்பாடமைந்த சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளது. கோவில் உள்ளே நுழைந்தவுடன் தென்புறம் சிறிய பசுமையான குன்று, படிக்கட்டுடன் காணப்படுகிறது. அதில் அமிர்தமிருத்ஞ்சயர் ஒரு; கையில் அமிர்த கலசம், ஒரு கையில் சின்முத்திரையுடன் கூடிய உருத்திராட்ச மாலை, ஒரு கையில் உடுக்கை, மற்றொரு கையில் திரிசூலமுடன் பத்மாசனமிட்டு அமர்ந்த நிலையில் தன்னை நாடி வரும் பக்தர்களின் துயர் சூரியனைக் கண்ட பனிபோல் மறைய அருள்பாளிக்கிறார். இந்த அமிர்தமிருத்ஞ்சயர் சிலை 1000 ஆண்டு பழமையானதும், தமிழகத்திலேயே இது போன்ற சிலை வேறெங்கும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இவரை வழிபடுவோர் மிகுந்த அமைதியும், நீண்ட வாழ்வும் பெறுகிறார்கள். திருமணத் ;தம்பதியரின் 60ஆம் மற்றும் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவினை மகிழ்வுடன் இவர் முன் செய்தால் அமைதி, குடும்ப மகிழ்ச்சி யாவும் பெறுகிறார்கள் என்றும் நம்பப்படுகிறது.
நந்தியம் பெருமான், கன்னிமூல கணபதி, ஆறுமுகன்
அடுத்து நம் கண்ணெதிரில் காணப்படுவது சிவனுக்கு எதிரில் உள்ள நந்தியம் பெருமான். இவரை உளமாற பிரார்த்தித்து, இடபுறமாக சென்றால் அழகிய மலர்கள், சிறிய மரங்களுடன் கூடிய அழகிய நந்தவனம் உள்ளது. கோவிலின் தென்புறத்தில் தட்சிணாமூர்த்தியை வணங்கிச் சென்றால் தென்மேற்கு மூலையில் கன்னிமூல கணபதி காட்சியளிக்கிறார். இவரை பக்தியோடு வணங்கி, பின்னர் சிவனின் நேர் பின்புற ஆலயத்தில் 6 தலைகள், 12 கரங்களுடன், மயில் வாகனத்தில் தமது 2 மனைவியரோடு அமர்ந்த நிலையில் ஆறுமுகன் பக்தர்களின் நலன் காக்க புன்னகையுடன் அருள்புரிகிறார்.
விஷ்னு துர்க்கையம்மன்:
விஷ்னு துர்க்கையம்மன்; சிவனுடைய அபிஷேகத் தீர்த்தம் விழும் கோமுகத்தின் மேல் அமர்ந்துள்ளார். பொதுவாக பிரம்மா இருக்கும் இந்த இடம் பிரம்ம கோஷ்டம் என அழைக்கப்படுகிறது. பிரம்ம கோஷ்டத்தின் மேல் விஷ்னு துர்க்கையம்மன் அமைந்துள்ளது தமிழகத்திலே; மூன்றே இடங்களில் தான் உள்ளது, அதில் இந்த ஆலயமும் ஒன்று என்பது இதன் சிறப்புக்கு ஒரு மைல்கல். இதைத் தவிர மதுரை மீனாட்சியம்மன் மற்றும் இராமநாதபுரத்தில் உள்ள உத்தரகோஷ மங்கை (ராமேஸ்வரம் செல்லும் வழி); ஆலயங்களிலும் உள்ளது. இந்த அம்மனை நெய் தீபமிட்டு வணங்க, நமது துன்பமெல்லாம் ஆடிக்காற்றில் பஞ்சினைப் போல பறந்தோடி விடும். திருமணமாகாத கன்னிப்பெண்கள் நெய்தீபமிட்டு, உள்ளன்போடும். ஆழந்த பக்தியோடும் 9 வாரங்கள் வணங்க விரைவில் அவர்களுக்கு திருமணம் நடந்தேறும். (இதனை பக்தர்கள் தங்கள் வாழ்வில் ஏற்ப்பட்டதை மகிழ்வுடன் இங்கு வந்து கூறுகிறார்கள்).
நாகர்:
கோவிலின் வலது புறத்தில் இயற்கையாகவே அரச மரமும், வேம்பு மரமும் இணைந்து வளர்ந்த மேடை காணப்படுகிறது. அதனருகில் வில்வமரமும் தானாக உருவாகியிருக்கிறது. இதில் 3 ½ அடி உயரமுள்ள 5 தலைகளுடன் கூடிய நாகம், 1 தலையுடன் கூடிய நாகமும் பிணைந்த நிலையில் காணப்படுகிறது. இதனை பக்தர்கள் நேரடியாக வந்து எண்ணெய் காப்பு, மஞ்சள், குங்குமம், சந்தனம் தடவி மற்ற சடங்குகளை தங்கள் கைகளாலேயே செய்வது இதன் சிறப்பு. இதனால் நாகதோஷம், களத்ர தோஷம் முதலியன தீர்க்கும்; சிறந்த பரிகாரத் ஸ்தலமாக விளங்குகிறது. அந்த நாகத்துடனே சேர்ந்து 1 தலையுடன் கூடிய சிறிய நாகம் இருப்பது கடுமையான புத்திர தோஷத்தை நீக்கும் வண்ணம் உள்ளது. இதனை குழந்தை பேறு இல்லாதவர்கள் பூஜித்தும,; மரங்களில் வளையல்கள் கட்டியும் வழிபட்டு வருகின்றனர்.
மூலவர்:
பத்தர்கள் மூலவரைக் காண நந்தியம் பெருமானுக்கு இருபுறங்களிலும் உள்ள படிக்கட்டுகள் வழியாக மேலேறிச் சென்றால் மூலவரை வழிபடலாம். இவர் 16 (சோடசலிங்கம்) பட்டைகளுடன் காட்சியளிப்பதால் இவர் சோடேஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றார். இந்த 16 பட்டைகளும் 16 செல்வங்களைக் குறிப்பதால், பக்தர்கள் இவரை வணங்கி 10 நிமிடங்கள் தியானித்தால் மன அமைதியும், சாந்தமும் மற்றும் தவறாமல் இவரை வணங்குவதால் 16 செல்வங்களையும் பெறுவதாக ஜதீகம்.
ஆனந்தவள்ளி தாயார்:
தாயார் தெற்கு நோக்கி 6 அடி உயரத்தில், 4 கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்பாளிக்கிறார். இவரது இரு கரத்தில் அபய ஹஸ்தமும் மற்ற இரு கரங்களில் தாமரை மொட்டும் வைத்திருக்கிறார். இவரை வழிபடுவதால் பக்தர்கள், குழப்பம், மன இறுக்கம் அகன்று ஆனந்த வாழ்வினை அடைகிறார்கள். .
இந்தளவு பெருமை மிகுந்த சுமார் 760 ஆண்டு பழமையான அருள்மிகு ஆனந்தவள்ளி தாயார் உடனுறை அருள்மிகு போஜீஸ்வரர் ஆலயத்தை வணங்கி வாழ்வில் என்றென்றும் மகிழ்வும், மன அமைதியும், 16 செல்வங்களும் பெற்று வளமுடன் வாழ்வோம்.