திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து
வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நாளை (29-ந் தேதி) நடைபெறுகிறது. இந்நிலையில் தஞ்சாவூரை அடுத்த களிமேடு அப்பர் கோவிலில் 94வது ஆண்டு சித்திரை திருவிழாவில் தேரோட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர். பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இச்சம்வத்துக்கு பிரதமர், குடியரசுத்தலைவர், உள்துறை அமைச்சர், முதல்வர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுபோல் ஸ்ரீரங்கத்தில் நடந்துவிட கூடாது என்ற அடிப்படையில் இன்று காலை ஸ்ரீரங்கம் தேரையும், தேர் செல்லும் வீதிகளையும் மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவில் நிர்வாகிகளிடம் கேட்டு அறிந்து மேலும் தகுந்த அறிவுரைகளை கூறினர்.