திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பிகே அகரத்தில் நண்பர்களோடு விவசாய கிணற்றில் குதித்து குதித்து குளித்துக் கொண்டிருந்த அரசு பள்ளி மாணவன் தவறி விழுந்து பலியானார். 48 மணி நேர போராட்டத்திற்கு பின் மாணவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. லால்குடி அருகே பி.கே.அகரம் வடக்கு தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜன்,சித்ரா தம்பதி. இவரது மகன் 16 வயதான முபிஷேக்.இவர் பாடாலூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பிகே அகரத்தில் உள்ள சுமார் 90 அடி ஆழ கிணற்றில் நேற்று மாணவன் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டார். இதுகுறித்து புள்ளம்மாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்கள் மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கிணற்றில் அதிகமாக தண்ணீர் இருந்ததால் மாணவனை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.2 வது நாளில் சமயபுரம் தீயணைப்பு வீரர்கள் தேடியும் மாணவனை மீட்பதில் தொய்வு ஏற்பட்டது .பின்னர் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றினர்.
தொடர்ந்து தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் பொதுமக்களும் மாணவணின் உடலை மீட்பதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 48 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பின் மாணவனின் உடல் சடலமாக தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டது பின்னர் உடலை சிறுகனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.