தமிழக அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) பணியாற்றும் அனைத்து மென் திறன் பயிற்றுநர்கள் சார்பாக ஸ்ரீகாந்த் தலைமையில்
செய்தியாளர் சந்திப்பு திருச்சியில் நடைபெற்றது.
ஸ்ரீகாந்த் அப்போது கூறுகையில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்றும்,பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த தேர்தல் அறிக்கையை நம்பி நாங்கள் அனைவரும் எங்களது குறைகளை தனி பிரிவில் சமர்ப்பித்தோம். ஆனால் தற்போது வரை எங்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் பணியாற்றி வந்த மென்பொருள் பயிற்றுநர்கள் 83 பேர் பணியிழந்து உள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுனர் கிருஷ்ணகுமார் நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டார். சிலர் வேலை நெருக்கடி காரணமாக விபத்துகளில் சிக்கி ஊனமுற்றவர்களாக மாறி உள்ளனர்.
ஏற்கனவே நாங்கள் பணியாற்றி வந்த ஒப்பந்த நிறுவனத்திற்கு பணி கொடுக்காமல் தற்போது அவுட்சோர்சிங் பணிகள் வேறு ஒரு நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளதால், நாங்கள் பணி இழந்து உள்ளோம். ஆகையால் எங்களது வேலை தனியாருக்கு செல்வதை தவிர்த்து, ஒப்பந்த பணியாளர்களான எங்களுக்கு காலமுறை ஊதியம் அல்லது ஊதிய உயர்வுடன் கூடிய நேரடி தொகுப்பு ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.