உத்தமர் கோயிலில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு கொடியேற்ற விழா நடைப்பெற்றது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், 108 திருப்பதிகளுள் ஒன்றானதும், திருக்கரம்பனூர்,ஆதிமாபுரம் மும்மூர்த்திகள்,முப்பெரும். தேவிகளும் குடி கொண்டிருக்கும் திருத்தலம் உத்தமர் கோயில் ஆகும்.இங்கு அருள்பாலிக்கும் புருஷோத்தம பெருமாளுக்கு ஆதியில் சத்கீர்த்திவர்த்தனன் என்கிற சோழ அரசரால் ஏற்படுத்தப்பட்ட சித்திரை பெருந்திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பதினொரு நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முதல் நாளான இன்று கோவில் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் காலை 8 மணிக்கு கருடர் படம் பொறித்த கொடி கொடிமரத்தில் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு திரவியம் பொடி, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.இதனைத்தொடர்ந்து அனுதினமும் முறையே சூரியபிரபை வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம் யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் புருஷோத்தம பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி வருகிற 14-ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பு ஹேமாவதி தலைமையில் கோயில் பணியாளர்கள் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.