அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கவிருப்பதாக தகவல்
அஜித்தின் 61 வது படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘வலிமை’ படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் கைகோத்துள்ளார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படம் ‘ஏகே61’ என அழைக்கப்படுகிறது. ஏப்ரல் 11 முதல் படப்பிடிப்பு துவங்கி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பை குறுகிய காலத்திற்குள் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, படத்தில் அஜித் தவிர மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடவில்லை. எனினும், பாலிவுட் நடிகை தபு அஜித்துக்கு ஜோடியாக நடிக்கலாம் என்று தகவல் வெளியானது. ஆனால் இப்போது தபுவுக்கு பதில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் அஜித்துக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
முன்னதாக, சில நாளுக்கு முன்பு நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து என இயக்குநர் சனல் குமார் சசிதரன் ஃபேஸ்புக்கில் கருத்துப் பதிவுசெய்திருந்தார். இன்று மஞ்சு வாரியர் புகாரின் அடிப்படையில் அவர் நாகர்கோவில் அருகே தமிழக-கேரள எல்லைப் பகுதியான பாறசாலையில் சனல் கைதுசெய்யப்பட்டுள்ளார். தன்னைத் தொடர்ந்து சமூக ஊடகத்தில் அவமானப்படுத்தியதாகவும் தன் பெயருக்குக் களங்கும் விளைவிக்கும் வகையில் இடுகை இட்டதாகவும் மஞ்சு புகாரில் கூறியுள்ளார்.